-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் விநியோகக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தும் இதுவரை நீர் இணைப்புக்களைப் பெற்றுக் கொள்ளாத வறிய குடும்பங்களுக்கான நீர் வழங்கல் திட்டத்திற்கு உதவியளிக்க வேள்ட் விஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்த நிதித்திட்டத்தின் கீழ் 1000 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கரைச்சி பிரிவின் கீழ் நீர் விநியோகம் வழங்குவதற்கான கொடுப்பனவை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வேள்ட் விஷன் நிறுவனம் வழங்கவுள்ளது.
சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான இச்செயற்திட்டத்திற்கான ஆரம்பக் கட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் மற்றும் வேள்ட் விஷன் நிறுவன கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு நீர் விநியோகத் திட்டம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.
குறிப்பாக சுத்தமான குடிநீரை பெறுவதில் வறிய குடும்பங்கள் எதிர் கொண்ட சவாலை வெற்றி கொள்வதற்கான வாய்ப்பாக இத்திட்டம் அமைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் முதற்கட்டமாக 700 குடும்பங்களுக்கு நீர் வழங்கும் செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக ஸ்கந்தபுரம்,கிருஸ்ணபுரம், ஊற்றுக்குளம், அம்பாள் குளம், அம்பாள் நகர் மற்றும் புதுமுறிப்பு ஆகிய கிராமங்களுக்கு இத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.
நீர் இணைப்பை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் மாதாந்த கட்டணத்தை செலுத்த வேண்டுமெனவும் குறிப்பாக நீர் இணைப்பு வழங்கப்படும்போது தேவைப்படும் கிடங்குகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை பயனாளிகள் பொறுப்பேற்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஸ்கந்தபுரம், கிருஸ்ணபுரம், ஊற்றுக்குளம், அம்பாள் குளம், அம்பாள் நகர் மற்றும் புதுமுறிப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


















