-சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில-
-சு.பாஸ்கரன்-
கடந்தகால அரசாங்கங்கள் வறுமை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை ஒழியவில்லை என கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்தார்.
கிளிநொச்சி, இரணைமடுவில் அமைந்துள்ள தாமரைத் தடாக மண்டபத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதாவது வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தை இந்த அரசாங்கம் கடந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் தான் ஆரம்பித்திருந்தது. இதற்கு முன்னர் இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து வறுமையை ஒழித்து கட்டுவதற்கு பல்வேறு திட்டங்கள் அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக ஜனசக்தி, சமுர்த்தி ,அஸ்வெசும போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் 24 வீதமான மக்கள் வறுமையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக 90 வீதமான மக்கள் பல்வகை வறுமையின் கீழ் வாழ்கின்றார்கள். அதாவது மலையகம் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்கள் தொடர்ந்தும் வறுமையிலே வாழ்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியச (தாமரைத் தடாகம்) மண்டபத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மன்னர் ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள், பிரதேச செயலர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச செயலக, பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















