-இ.கலைஅமுதன்-
யாழ். வலி,வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நேற்று பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதேசசபை உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படது.
வலி,வடக்கில் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினர் வசம் இருக்கும் 2500 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை விடுவிக்க கோரியே குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர், இராணுவம் காடுகளில் இருக்கலாம். பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். பொதுமக்களின் காணிகளில் இருந்து கொண்டு விவசாயம் செய்ய ஆட்களை நியமித்து எந்தவித செலவும் இல்லாமல் மிக குறைந்த விலையில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கின்றனர். காணி உரிமையாளர்கள் தோட்டம் எதுவும் செய்ய முடியாது, காணியும் இல்லாது இருக்கின்றனர். மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – என்றார்.


















