-ரவிகரன் எம்.பி. பொலிஸாரிடம் வலியுறுத்து-
-வி.சரவணன்-
முல்லைத்தீவு, வலைஞர்மடம் கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையிலேயே மேற்கண்ட கோரிக்கையினை விடுத்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னரைவிடவும் தற்போது கசிப்பு உற்பத்தி குறைவடைந்துள்ளது. இருப்பினும் வலைஞர்மடம் கிராமத்தில் கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. வலைஞர்மடம் கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் கசிப்பு அம்பலவன்பொக்கணை, மாத்தளன், செம்மண்குன்று உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்கும் குறித்த கசிப்பு உற்பத்தியாளருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும், பொலிசார் குறித்த கசிப்பு உற்பத்தியாளரிடமிருந்து கையூட்டுக்களைப் பெறுவதாகவும் மக்கள் என்னிடம் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து பேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதற்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களைக் கைதுசெய்து மிகக்கடுமையான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றது என முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பதிலளித்தார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பாகவும் எம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் நபரைக் கைதுசெய்து அவருக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.


















