-கஜிந்தன்-
இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிகழ்த்தப்பட்ட வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போதான இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு மற்றும் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் அறிக்கையின் நூல் வெளியீட்டு நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் செயலாளர் இரா.மயூதரன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பினரால் தயாரிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போது நிகழ்ந்த இழப்புகளுக்கான இழப்பீட்டு பரிந்துரை அறிக்கையினை வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு செயலாளர் ந. அனந்தராஜ் வெளியிட்டு வைத்திருந்தார்.
இதன்போது மாவீரர் ஒருவரின் தந்தை சுந்தரலிங்கம் பொதுச்சுடரினை ஏற்றியதைத் தொடர்ந்து பங்கேற்றிருந்தவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். தொடர்ந்து ந.அனந்தராஜ் மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
தொடர்ந்து ஏனையவர்களும் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ந.அநந்தராஜ் இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டு வைத்ததுடன் வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் நூலினையும் வெளியிட்டு வைத்தார்.
நூலின் முதற்பிரதியை பருத்தித்துறை நகராட்சி மன்ற தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அதன் பிரதி மற்றும் இழப்பீட்டு பரிந்துரை அறிக்கை என்பன பங்கேற்றிருந்த பிரதிநிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சி பதில்ச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார்.


















