-நிவர்த்திக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை-
-சு.பாஸ்கரன்-
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு வழிசமைக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் தற்போது 940 மாணவர்கள் வரை கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பாடசாலையில் பௌதிக வளப் பற்றாக்குறைகள் காணப்படுகின்ற அதேநேரம் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதாவது குறித்த பாடசாலையில் கடந்த காலங்களில் க.பொ.த சாதாரணதரம் மற்றும் தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றில் 77 வீதத்துக்கு மேற்பட்ட பெறுபேறு பெற்றுக் கொண்ட பாடசாலை இப்பொழுது 50 வீதத்துக்கும் குறைவான பெறுபேறுகளை பெற்று வருவதாகவும் குறித்த பாடசாலையில் கல்வி செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் தகுதியான அதிபர் ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது கடமையில் உள்ள அதிபர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கோட்டக்கல்வி அலுவலக, வலயக் கல்விப் அலுவலகம், மாகாண கல்வி அமைச்சு, வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு முறைப்பாடு தெரிவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர் .
மாணவர்களுக்கான மேலதிக கற்றல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. குறிப்பாக தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்துவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில்கொண்டு குறைபாடுகளை சீர்செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.


















