வவுனியா மாவட்டத்தில் 2025 ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி வரை 64 வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 1200 தொடக்கம் 1300 மில்லி மீற்றர் அளவிலேயே மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறுகின்றது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் ஜனவரி முதல் ஒக்ரோபர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 834.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 465.7 மில்லி மீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகும் எனவும் இனிவரும் காலப்பகுதியில் பெய்யும் மழை சாதாரண மழையாகவே காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டாலும் சராசரி மழைவீழ்ச்சியாகவே காணப்படும்.
மேலும் இக்காலப்பகுதியில் தாழமுக்க நிலை ஏற்படும் பட்சத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி ஏற்படுவதற்கான நிலைமை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.


















