வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார்.
தாதியர் பயிற்சிக் கல்லூரி சமூகத்தின் கோரிக்கையின் பிரகாரம் இடம்பெற்ற இவ்விஜயத்தின் போது தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அத்துடன் பயிற்சிக் கல்லூரி வளாகத்தையும் பார்வையிட்டதுடன், குறைபாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருந்தார்.
அடையாளம் காணப்பட்ட மற்றும் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள், தேவைப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று அவற்றை தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


















