சத்தியலிங்கம் எம்.பி.கோரிக்கை
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மேலதிக மரக்கறிகளை சேமித்து வைக்கக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைத்துத்தருமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்து மேலும் தெரிவிக்கையில்:
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை கொள்வனவு செய்ய மொத்த வியாபாரிகள் பல இடங்களில் இருந்தும் வருகின்றனர். எனினும், தினமும் 4000 தொடக்கம் 5000 கிலோ வரையிலான மரக்கறிகள் விற்பனை செய்யப்பட முடியாத நிலையில் அதனை பாதுகாப்பாக சேமித்து வைக்கக்கூடிய வசதியின்மையால் பழுதடைகின்றன.
இதனால் பொருளாதார மத்திய நிலைய மொத்த வியாபாரிகள் அதிக நட்டத்தையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.
எனவே, வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் தினமும் எஞ்சுகின்ற மேலதிக மரக்கறிகளை பாதுகாப்பாக சேமித்து வைக்கக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறைகளை அமைக்கும் செயற்பாட்டை விவசாய அமைச்சின் 2026ம் ஆண்டுக்கான திட்டத்தில் உள்வாங்கி அவற்றை அமைத்துத்தர வேண்டுமென கோருகின்றேன் – என்றார்.


















