-கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க-
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை திரிபு படுத்தி தெரிவித்துள்ளார் என கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆளுநரிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவால் கூட்டத்தில் வைத்து பழி வாங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார்.
மணலாறு அபிவிருத்திக்குழு கூட்டம் காலை 9.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அந்த நேரத்தில் அங்கு சென்றிருந்தேன்.
கூட்டம் ஆரம்பித்து 30 நிமிடங்களின் பின்னர் பிரதேச செயலர் மற்றும் வவுனியா வடக்கின் தவிசாளருக்கிடையில் விவதாம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன்போது மேடையின் முன் வரிசையில் அமரவேண்டும் என தவிசாளர் கோரிக்கை விடுப்பதாக பிரதேச செயலர் என்னிடம் வந்து கூறினார்.
இதனையடுத்து உள்ளூராட்சி அமைச்சின் விதிமுறைகளின் படி மேடையில் அமர்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அனுமதி உள்ளது எனக் கூறி
இது தொடர்பாக நான் விளக்கமளித்திருந்தேன். இருப்பினும் வலுக்கட்டாயமாக மேலே வந்து அவர் எனக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.
நான் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கூட்டத்தை ஆரம்பித்திருந்தேன். இதன்போது மொழிபெயர்ப்பு தேவையா என்று அங்கிருந்த மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டிருந்தேன். அவர்கள் தேவையில்லை என்பதால் கூட்டம் அப்படியே நடாத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த தவிசாளர் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒலிவாங்கி வேண்டுமா என்று கேட்டபோது அவர் கோபத்துடன் என்னிடம் இருந்து அதனை வாங்கினார். பின்னர் அவர் உரையாற்றினார்.
நெடுங்கேணியில் நடைபெற்ற கிவில் ஓயாவிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக அவர் குறிப்பிட்டார். அதற்கு தலைமை தாங்கியமையாலேயே தன்னை நான் பழிவாங்குவதாக அவர் கூறினார். தனக்கு மேலே இருக்க உரிமை உள்ளது. தான் ஒரு பிரதேச சபையின் தவிசாளர் என்று கூறினார். எனக்கு சிங்களம் தெரியாது. அனைத்திற்கும் மொழி பெயர்ப்பு வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறினார்.


















