இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான ‘தடைபட்ட தேவை’ தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், சந்தை நிலைமைகள் மேம்படுவதால் வாகனங்களின் விலை மேலும் குறையும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் அதிகரித்தமையால் வாகனங்களுக்கான தேவை எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்படுகிறது.
எவ்வாறாயினும், கடந்த இரண்டு மாதங்களாக இந்தத் தேவை குறைந்து வருவதாகவும், இது தொடர்ந்தும் குறைவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும், இந்தத் தேவைக் குறைவு, மோட்டார் வாகனங்களின் விலை மேலும் வீழ்ச்சியடைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மத்திய வங்கியின் தரவுகளின்படி, இலங்கை இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.















