யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 பிரதான வீதியின் 149 வது மைல் கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரம்பாவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 33 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஏ9 பிரதான வீதியின் 149 வது மைல் கல் பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள காடுகளை துப்பரவு செய்து தீ வைத்திருந்த போது அந்த இடத்தினை தாண்டி அநுராதபுரம் பகுதியில் இருந்து மதவாச்சி பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் ஓட்டுனருக்கு புகை மற்றும் தீச்சுவாலை காரணமாக வீதி தெளிவின்மையால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் எதிர்த்திசையில் பயணித்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சிகிச்சைக்காக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


















