-சிற்றூழியர்களின் போராட்டம் குறித்து மாநகரின் முதல்வர்-
-இ.கலைஅமுதன், க.சபேஷன், சொ.வர்ணன்-
பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.மாநகர சபையின் சிற்றூழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் சதிகளின் பின்னணியில் போராடுகிறார்கள் என்றும் வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என்று யாழ்.மாநகர முதல்வர் மதிவதனி கூறியுள்ளார்.
பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமாறு கோரி யாழ்.மாநகர சுகாதார சிற்றூழியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பணிப் பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.மாநகரின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்ற நிலையில், சபைக்கு முன்பாக ஒன்று கூடி அவர்கள் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அனைத்து மாநகர, நகரசபைகளினது சுகாதார பகுதிகள் பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் தான் இருந்து வருகின்றது. ஆனால் யாழ்.மாநகரின் சுகாதாரப் பிரிவு மட்டும் பொறியியலாளரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
அதனால் நாளாந்தம் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகிவருகின்றது. எனவே இவ்வாறு இருக்கும் நடைமுறையை மாற்றி பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் கொண்டுவரல் வேண்டும்.
அத்துடன் ஊழியர்களது நிரந்தர நியமனம், இடமாற்றம், உழவு இயந்திர ஒப்பந்தங்கள் மூலம் வகைதெரியப்படும் திண்மக்கழிவுகள் பிரித்தாழ்கையில் இருக்கும் குழப்பங்கள் உள்ளிட்ட சில நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். மற்றும் கண்காணிப்பாளர்களது இடமாற்றம் உள்ளிட்ட விடையங்களும் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் சபை அமர்வின் போது, அந்த சிற்றூழியர்கள் நடாத்துகின்ற போராட்டம் தொடர்பில் உறுப்பினர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளித்திருந்த முதல்வர்:-
முறையான முன்னறிவிப்பு இன்றியும், தெரியப்படுத்தல்கள் இன்றியும் வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை. சதிகளின் பின்னணிகள் மூலம் அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். வேண்டுமானால் என்னை எழுத்து மூலம் ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரிசீலிப்பேன் என்றார்.


















