திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள சுற்றாடல்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாராளுமன்றம் ஆவணம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமர்வை தொடர்ந்து சபை ஒத்திவைப்பு வேளையின் போது வெருகல் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பிரேரணையை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் 4,809 குடும்பங்களைச் சேர்ந்த 16,156 மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிப்படுத்துகிறேன். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு 10 கிராம அலுவலர் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் 7 கிராம அலுவலர் பிரிவுகளை முழுமையாகவும், 3 கிராம அலுவலர் பிரிவுகளை பகுதியாகவும் வனவிலங்குத்துறை உரிமை கோருகின்றது. வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் பரப்பளவு 32,042 ஏக்கர் ஆகும். இதில் 25,242 ஏக்கரை வனவிலங்குத் துறை உரிமை கோருகின்றது.
வனவிலங்குத்துறை உரிமை கோரும் பகுதியில் வாழும் 4.778 குடும்பங்கள் நில ஆவணங்களை வைத்திருக்கின்றனர். மேற்படி பகுதியில் 18 பாடசாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் 3300 மாணவர் கல்வி கற்கின்றனர் 98 சமய வழிபாட்டு இடங்கள் அமைந்துள்ளன.
வனவிலங்குத் துறை உரிமை கோரும் பகுதியில் பிரதேச செயலகம், பிரதேச சபை. 10 கிராம அலுவலர் அலுவலகம். மருத்துவமனை அஞ்சல் அலுவலகங்கள். நீர் வழங்கல் சபை முதலிய அரச பணிமனைகள் அமைந்துள்ளன.
வனவிலங்குத் துறை உரிமை கோரும் பகுதியில் மக்கள் மரபு வழியாக மேய்ச்சல் தரையாக பன்படுத்தி வரும் ஆவணம் உள்ள நிலங்களும் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் மக்கள் நெற்செய்கை மேற்கொள்ளும் 17 குளங்களும் அமைந்துள்ளன.
தாம் விரும்பும் வேலைகளை செய்யும் வனவிலங்குத் துறையானது. பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்டோருக்கு அபிவிருத்தி வேலைகள் செய்யத் தடை போடுகின்றது.
வெருகலில் உள்ள அரச பணிமனைகள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் தத்தம் இடங்களில் எந்தச் செயற்பாட்டினை மேற்கொள்வதாயினும் வனவிலங்குத் துறையிடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இது மிகவும் சிக்கலான செயற்பாடாக உள்ளது.
வெருகல் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் மேற்படி சிக்கல் பற்றி சுற்றாடல் துறை அமைச்சர் அறிவாரா? அறிந்திருந்தால் இதற்கு அமைச்சர் என்ன தீர்வை வழங்கப் போகின்றார்? மேற்படி சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு இந்த உயரிய அவை ஆவன செய்ய வேண்டும் என முன்மொழிகின்றேன் என்றார்.


















