கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நடத்த முயன்ற இளைஞர்கள் இருவர் விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவரும் கம்பஹா – வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவரும் ஆவர்.
சந்தேக நபர்களான இளைஞர்கள் இருவரும் டுபாயில் இருந்து நேற்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 60,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 300 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 90 இலட்சம் ரூபா என விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


















