டெங்கு காய்ச்சலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன்பள்ளி செல்லும் குழந்தைகளின் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த அறிவுறுத்தல் பாடசாலைகளுக்கு மட்டுமன்றி முன்பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு முன்பு, அவர்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு ஆடைகளை அணிவிக்குமாறும், தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான கொசு விரட்டிகளை பயன்படுத்துமாறும் அமைச்சர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி நிறுவனங்களில் டெங்கு அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமான காலப்பகுதி எனவும், பெற்றோர்கள் அதிக விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

















