இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும் ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அறிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் தனித்துவமான நீரியல் சூழற்றொகுதியையும், தேசிய மீன் வளத்தையும் பாதுகாப்பது எமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். அதேவேளை நாட்டிற்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் அலங்கார மீன் வளர்ப்புத் துறையை வலுப்படுத்துவதும் எமது நோக்கமாகும். இவ்விரு துறைகளையும் சமநிலையுடன் முகாமைத்துவம் செய்து, சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆக்கிரமிப்பு மீன் இனங்களைத் தடை செய்ய நாம் தீர்மானித்துள்ளோம். இது எக்காரணம் கொண்டும் அலங்கார மீன் வளர்ப்புத் துறைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. மாறாக அதனை ஒரு நிலையான வழியில் முன்னெடுப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அத்துடன், தெதுரு ஓயாவில் பரவிவரும் ஆக்கிரமிப்பு மீன்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மக்கள் பங்குபற்றுதலுடன் மாபெரும் செயற்றிட்டம் ஒன்றையும் நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.
அமைச்சரின் தீர்மானத்திற்கான விஞ்ஞானப் பின்னணியை விளக்கிய அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச பிரானா வகைகள், நைஃப் ஃபிஷ், அலிகேட்டர் கார், ரெட்லைன் ஸ்னேக்ஹெட் அல்லது ஜயன்ட் ஸ்னேக்ஹெட் ஆகிய மீன் இனங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தப் புதிய விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளது என்பது இங்கு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.


















