கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 42 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற சீன நாட்டு பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) அதிகாலை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கிரீன் சேனல் வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வெளியேற முயன்றபோது, குறித்த பெண் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் 40 வயதுடைய சீன நாட்டு தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
அவரின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,000 சிகரெட்டுகள் அடங்கிய 140 கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 42 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

















