சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள், டெப் கணினிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிகரட்டுக்களையும், கஞ்சாவையும் பொதி செய்ய பயன்படுத்தப்படும் பெட்டிகளுடன் பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களான 32 வயதுடைய ஆணும் 45 வயதுடைய பெண்ணும் ஆவர்.
சந்தேக நபர்கள் இருவரும் டுபாயில் இருந்து இன்றைய தினம் அதிகாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கொண்டு வந்த 5 பயணப்பொதிகளில் இருந்து 132 நவீன கையடக்கத் தொலைபேசிகள், 14 டெப் கணினிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிகரட்டுக்களையும், கஞ்சாவையும் பொதி செய்ய பயன்படுத்தப்படும் 1,700 பெட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 50 இலட்சம் ரூபா என விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


















