கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் கடற்படையினர் நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகளை பிடித்துள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் படகுகளால் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலோரப் பகுதியில் இரண்டு சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இதன்போது, 18 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 38 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன், இரண்டு டிங்கிகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் மொத்த மதிப்பு 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கஞ்சா தொகை மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

















