-த.அம்பிகாவதி-
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனமான நற்குண முன்னேற்ற அமைப்பின் கிராமிய இதயத்துடிப்பு நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற தொழிற்பயிற்சிகள், மாணவர்களுக்கான வகுப்புகள், விளையாட்டுக்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் போன்ற வற்றை ஊக்கப்படுத்துவதை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டிற்கான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கோட்டக்கல்வி அலுவலர், தர்மக்கேணி அ.த.க பாடசாலை அதிபர், புலோப்பளை றோ.க.த.க.பாடசாலை அதிபர், பளை மத்திய கல்லூரி ஆசிரியர், வேம்பொடுகேணி சி.சி.த.க பாடசாலை ஆசிரியர், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், தம்பகாமம் கிராம அலுவலர், சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவளத்துணை உதவியாளர், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோட்டக்கல்வி அதிகாரி ஊடாக பாடசாலை மட்டங்களில் இது தொடர்பான தகவல்களை வழங்குதல், பாடசாலைகளில் நடைபெறும் காலைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் கலந்து கொண்டு தகவல்களை வழங்குதல், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ஒருங்கிணைப்பு கூட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்கள் மேற்கொள்வதாக தீர்மானங்கள் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது.


















