யாழ்.குடாநாட்டையும் – தீவுகளையும் இணைக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்வதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதுடன், சமூக ரீதியாக, சமய ரீதியாக மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது காணப்படுகின்ற இறங்குதுறை நீண்டகாலமாக சமுத்திர நிலைமைகளால் பாரியளவிலான புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால், பாரியளவிலான கட்டமைப்பு ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது.
போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்குதுறையின் முக்கியத்துவத்தை அடையாளங்கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் குறிகாட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


















