அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பணத்தை நாங்கள் என்ன செய்கிறோம் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. தேசிய லொத்தர் சபைக்கு கிடைக்கும் நிதி பொதுமக்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேசிய லொத்தர் சபைக்கு நூற்றுக்கு 3 வீதம் மாத்திரமே இலாபம் கிடைக்கிறது என தேசிய லொத்தர் சபையின் தலைவர் எம்.டி. சிறில் அந்தோனி பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய லொத்தர் சபை மற்றும் எல்ல பிரதேச சபை இணைந்து பதுளை – எல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள ‘இன்னும் கொஞ்சம் கவனமாக’ என்ற வீதிப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நேற்று வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தேசிய லொத்தர் சபையின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய லொத்தர் சபை பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. ஒரு அதிஷ்டலாபச்சீட்டு 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பணத்தை நாங்கள் என்ன செய்கிறோம் என பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது.
உண்மையிலேயே அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணம் மீண்டும் பொதுமக்களிடமே கொண்டு சேர்க்கப்படுகிறது. அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் நூற்றுக்கு 24 வீதம் சீட்டிழுப்பு பரிசுகளாக மீண்டும் பொதுமக்களிடமே கொண்டு சேர்க்கப்படுகிறது.
இவ்வாறு கிடைக்கும் இலாபத்தையும் தேசிய லொத்தர் சபை, பொதுமக்களுக்கான பல்வேறு செயற்திட்டங்கள் மற்றும் நிதி உதவிகள் ஊடாக மீண்டும் பொதுமக்களுக்கே வழங்குகிறது.
வீதிப் பாதுகாப்புத் திட்டங்கள், வீதி அபிவிருத்தி திட்டங்கள், தேசிய சிறுநீரக நிதி, விவசாயிகள் நிதி, விளையாட்டு மேம்பாட்டு நிதி போன்ற பல்வேறு நிதி உதவிகளை தேசிய லொத்தர் சபை பொதுமக்களுக்காக வழங்கி வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















