-ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்
-கொழும்பில் நேற்று இரகசிய சந்திப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் எதேச்சதிகாரப் பயணத்தைக் கண்டித்தும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கூட்டு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடை நடைபெறவுள்ள ‘மாபெரும் மக்கள் குரல்’ (மஹ ஜனஹண்ட) என்னும் தொணிப் பொருளில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி குறித்துப் கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு – கொம்பனித் தெருவில் உள்ள பிரபல விருந்தகம் ஒன்றில் அவசர சந்திப்பை நடத்தினர்.
மிகவும் இரகசியமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எதிர்வரும் நவம்பர் 21 பேரணி குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, ஒரு அரசியல் தலைவர், மஹ ஜனஹண்ட பேரணியை அரசாங்கமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அதிகபட்ச ஒழுக்கத்துடன் இந்த பேரணியை நடத்த வேண்டும். ஏனெனில், அரசாங்கம் இந்தப் பேரணியில் குழப்பங்களை ஏற்படுத்த முயலலாம் என்று எச்சரித்துள்ளார்.
மற்றொரு தலைவர், ‘ஆம், அது உண்மைதான். மிகப் பெரிய மக்கள் கூட்டம் வரவிருப்பதால், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்டவர்கள் மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்கள் கட்டுப்பாடுக் குறித்து எங்கள் அமைப்பாளர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இடதுசாரி பாரம்பரிய அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர், ‘ஐக்கிய மக்கள் சக்தி’ நிச்சயமாகப் பங்கேற்கிறதா?’ என்று வினவினார்.
அதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர், ஆம், நிச்சயமாகப் பங்கேற்கிறது. இது தொடர்பாக கலந்துரையாட அண்மையில் நடந்த கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தொடர்ந்து கலந்துகொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை. சுஜீவ உள்ளிட்ட சிலர் எங்களுடன் ஒருங்கிணைப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்’ என்று உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பில், நுகேகொடை பேரணிக்கான ஊடகப் பிரசாரம் மற்றும் சமூக ஊடகப் பிரசாரப் பொறுப்புகளைப் பிரித்துக் கொள்வது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து மேலும் கலந்துரையாட விரைவில் மற்றுமொரு சந்திப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் உதய கம்மன்பில, சாகர காரியவசம், மஹிந்த அமரவீர, தலதா அத்துகோரள, அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ், டி.வி. சானக, மொஹமட் முஸம்மில், அஜித் ராஜபக்ஷ, சஞ்ஜீவ எதிரிமான்ன, பிரேமநாத் சி. தொலவத்த, அசங்க நவரத்ன, சுகீஷ்வர பண்டார, சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், மஹிந்த சூறாவளி எனும் பிரச்சாரம் நுகேகொடையில் இருந்தே ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.


















