ஹொரணை – மீனவபலான – சிரில்டன்வத்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, ஹொரணை, மீனவபலான, சிரில்டன்வத்த பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மீனவபலான பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவருக்கும் 45 வயதுடைய நபரொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர், 45 வயதுடைய சந்தேக நபருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று, உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் உணவகத்துக்கு சென்று மீண்டும் வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது சந்தேகநபர் வீதியில் மறைந்திருந்து இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் போர் 12 ரக துப்பாக்கியை இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தியுள்ள தாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















