2020 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில், இந்த பாதுகாப்பற்ற கடவைகளில் மொத்தம் 385 விபத்துகள் இடம்பெற்று, 37 உயிரிழப்புகளும், 105 காயங்களும் ஏற்பட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டுக்கான ரணில் திணைக்களத்தின் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. மேலும் 2024 ஆம் ஆண்டில் சுமார் 49 வீதமான ரணில் பயணங்கள் (58,693 ரயில்கள்) தாமதமாகின.
இது ரயில் சேவைகளை உரிய நேரத்தில் இயங்குவதிலுள்ள சிக்கல்களை எடுத்து க்காட்டுகிறது. கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 125,036 பயணங்களில், அதிசொகுசு, அதிவேக, கலப்பு, பயணிகள், சரக்கு ரயில்கள் மற்றும் ரயில் – பஸ்கள் உட்பட 119,731 ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. அதில் 61,038 ரயில் சேவைகள் மட்டுமே சரியான நேரத்தில் இயங்கியுள்ளன.
மேலதிகமாக, 5,305 ரயில்கள் அல்லது திட்டமிடப்பட்ட பயணங்க ளில் 4.2 சதவீதம் இரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்கத் தவறியது, தேய்ந்துபோன இயந்திர ங்களை சரிசெய்வதில் தாமதம், பழைய இயந்திரங்களை மற்றும் பவர் செட்கள், இரத்மலானை தொழிற்சாலையில் நவீனமயமாக்கலில் தாமதம், தண்டவாளங்களை தாமதமாக வழங்குதல், விதிக்கப்பட்ட வேக கட்டுப்பாடுகள், வீதி பணிகள் காரணமாக பயணநேரங்கள் கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் சீரற்ற வானிலை உள்ளிட்ட பல காரணிகளால் இந்த தாமதங்கள் மற்றும் இரத்து செய்தல் ஏற்பட்டதாக கணக்காய்வு அதிகாரி தெரிவித்தார்.
எனினும், தாமதங்கள் மற்றும் இரத்து செய்யப்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை நடைமுறைப்படுத்தி, ரயில்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கே இயங்குமாறு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
நாட்டின் முழு ரயில் வலையமைப்பில் உள்ள 1,362 முக்கிய மற்றும் சிறிய ரயில் கடவைகளில் 439 பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இதில் 200 கைகளால் இயங்கும் கதவுகளும் அடங்கும் எனவும் கணக்காய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது பயணிகளுக்கும் ரயில் சேவைகளுக்கும் கடும் அபாயங்களை ஏற்படுத்துகிறது.
2020 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில், இந்த பாதுகாப்பற்ற கடவைகளில் மொத்தம் 385 விபத்துகள் இடம்பெற்று, 37 உயிரிழப்புகளும் 105 காயங்களும் ஏற்பட்டுள்ளன. இது பெருமளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதாமையாலும், உள்ள பாதுகாப்பு முறைகள் சரியாக செயல்படுத்தப்படாமையாலும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மொத்த கடவைகளில் 185 தனியார் வழித்தடங்களாகவும், மீதமுள்ள 1,177 ரயில் திணைக்கள பராமரிப்பில் உள்ளதாகவும், அதில் 300 கடவைகள் கதவுகளுடன் மற்றும் 438 கடவைகள் சமிக்ஞை வசதியுடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற கடவைகளில் பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள், வேக கட்டுப்பாடுகள் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து எச்சரிக்கை அறிவிப்புகள் போன்ற தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், அனைத்து பாதுகாப்பற்ற கடைவாயில்களிலும் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து, எதிர்கால விபத்துகளைத் தடுக்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும், கணக்காய்வு பரிந்துரைத்துள்ளது.
மேலும், 2020 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் 660 ரயில் தடம்புரண்டுகள், 585 இயந்திரக் கோளாறுகள் மற்றும் 13 மோதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் கணக்காய்வு தெரிவித்துள்ளது.


















