வத்தளை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு, மாதம் ஒருமுறை வத்தளை பிரதேச செயலகத்தில் அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெறும். அதில் நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது அப்படி இல்லை. அரசாங்கம் சிலருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப இணைத் தலைவரும் வத்தளை மாபொல நகரசபை உறுப்பினருமான எஸ்.சசிக்குமார் தெரிவித்தார்.
வத்தளையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாதாந்த நகரசபை கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனநாயக மக்கள் முன்னணியின் உப இணைத் தலைவரும் வத்தளை மாபொல நகரசபையின் உறுப்பினருமான எஸ்.சசிக்குமார் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வத்தளை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் சம்மந்தமான விடயங்கள் தொடர்பில் ஆராய மாதம் ஒருமுறை வத்தளை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெரும் அதில் நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. அரசாங்கம் சிலருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கிறார்கள். அதனால் கடந்த கூட்டத்தில் எனக்கு பங்கு பெற முடியாமல் போனதை எண்ணி கவலை அடைகிறேன்.
இது சம்பந்தமாக தலைவர் மனோ கணேசனிடம் முறைப்பாடு செய்துள்ளேன். அவர் கவனிப்பதாக கூறியுள்ளார். நான் நகரசபை மாதாந்த சபை கூட்டத்தில் சபை தலைவர் வி.பிரகாஷிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தேன். பிரதேச செயலகத்தில் நடைபெறுகிற கூட்டத்தில் நீங்கள் தான் எங்கள் மக்கள் சார்பாக கலந்து கொள்ளும் உறுப்பினர். ஆகவே இந்த அரசாங்கம் வத்தளை பிரதேசத்தின் அபிவிருத்தி சம்மந்தமாக தவறான முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும்.
இதனை அனைத்து சபை உறுப்பினர்கள் முன் ஏற்றுக்கொண்டார். உதாரணமாக வத்தளை தமிழ் பாடசாலைக்காக ஒலியமுல்லை பகுதியில் ஒதுக்கப்பட்ட காணியை அரசாங்கம் வேறு அபிவிருத்திகாக பயன்படுத்த விடக்கூடாது.
அந்தக் காணியில் தமிழ் பாடசாலை கட்டப்படவேண்டும். அதற்காக நான் குரல் கொடுப்பேன் என அனைத்து சபை உறுப்பினர்கள் முன் கூறியுள்ளேன். சபைத் தலைவர் வி.பிரகாஷ் அதனை ஏற்றுக்கொண்டார். எனது வேண்டுகோள் வத்தளை நகரசபை ஹன்சாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


















