ஆழ்கடலில் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை இலங்கைக்கும் வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சித்ரால் பெர்னாண்டோ இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கோரியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சித்ரால் பெர்னாண்டோ நேற்று முன் தினம் வியாழக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த போதே மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, பெங்களுரில் உள்ள இஸ்ரோவுக்குச் சென்று எனக்கு பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே, விண்வெளி ஆய்வுகளுக்கு மேலதிகமாக, ஆழ்கடலில் மீனவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளைத் தடுக்க இஸ்ரோ, டிஏடி-எஸ்ஜி எனப்படும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கிப் பயன்படுத்தி வருவதை அறிந்துகொண்டேன்.
இவ்விடயம் குறித்து மேலும் ஆராய்ந்த பின்னர், தான் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து, புத்தளம் மாவட்டக் கரையோரப் பகுதிகளில் ஆரம்பப் பரிசோதனையாக ஆரம்பித்து, இலங்கை மீனவர்களின் நன்மைக்காக இந்தத் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன் என பாராளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், மீன்பிடி நடவடிக்கைகளுக்கு வசதியளிக்கும் இந்தியாவின் குறித்த தொழில்நுட்ப மென்பொருளை இலங்கை மீனவ சமூகத்திற்கு வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.















