ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னத்தின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நினைவுச் சின்னம் கொழும்பில் செனோடாப் போர் நினைவிடம் என அழைக்கப்படுகிறது. இது அப்போதைய இலங்கை இராணுவ அதிகாரிகள் இரு உலகப் போர்களிலும் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நிறுவப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும்.
இந்த நினைவுச் சின்னம் இலங்கையின் பழமையான மற்றும் பிரதானமான போர் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். இங்கு வருடாந்த நினைவு தினத்தில் நவம்பர் 11 ஆம் திகதியை அண்மித்த ஞாயிற்றுக்கிழமை தேசிய நினைவேந்தல் விழா நடத்தப்படுகிறது.
இதன்போது, பிரதமர் நினைவுச் சின்னத்தில் பொப்பி மலர்க் கொத்தை வைத்து, உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தினார்.
முதலாம் உலகப் போர் காலம் முதல் இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் நீத்த ஆயுதப்படை உறுப்பினர்களை நினைவுகூருவதும் அவர்களின் உன்னதமான தியாகத்திற்குக் மரியாதைச் செலுத்துவதுமே இந்த வருடாந்த நினைவேந்தலின் பிரதான நோக்கமாகும்.


















