-பா.சதீஸ்-
வடமாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி நேரில் கேட்டறியவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மிக விரைவில் முல்லைத்தீவுக்கு வருகைதந்து கடற்றொழிலாளர்களுடன் பேசுவதாக உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் – தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாண கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.
இதேவேளை கடற்றொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பான ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல் நடத்த விரும்பும் விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்ததுடன், கடற்றொழிலளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி அறியவேண்டும்.
என்ற கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில் மிக விரைவில் தாம் முல்லைத்தீவுக்கு வந்து கடற்றொழிலாளர்களுடன் நேரடியாக பேசி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதிலளித்துள்ளார் என்றார்.


















