வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 21 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் வழக்கு பிரதி மேயருக்கு எதிராக உள்ளமையால் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி கோரியதுடன் மேயர் மீதான இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரினர்.
இதற்கு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இவற்றை ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு வழங்கப்ட்ட இடைக்கால தடை உத்தரவை எதி டிசம்பர் 8 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியைச் சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன், ஜனநாயக தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


















