-பேரனர்த்தத்தை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்-
வங்கக்கடலில் ‘சென்யார்’ என்ற புதிய புயல் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வட,கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் கனழை பெய்யும் என்று எதிர்வுகூறியுள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா பேரனத்தம் ஒன்றை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையின் தென்மேற்கிலும், தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளை புதன்கிழமை ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்று தெற்கு நோக்கி, ஆரம்பத்தில் முழுவதும் இலங்கை நிலப்பகுதியூடாக நகர்ந்து பின்னர் இலங்கையின் கிழக்கு கரையில் அரைவாசிப்பகுதி நிலப்பகுதியிலும், அரைவாசிப்பகுதி கடற்பகுதியுமாக நகர்ந்து எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து கிழக்கு கரையோரமாக நகர்ந்து வடக்கு மாகாணத்தினை அண்மித்து, எதிர்வரும் 30 ஆம் திகதி அன்று வடமாகாணத்தில் இருந்து நீங்கி மேலும் வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதே வேளை நாளை புதன்கிழமை முதல் 29 ஆம் திகதி சனிக்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் புதன்கிழமை முதல் கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதேவேளை நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற கன மழை காரணமாக நிலம் நிரம்பியுள்ளது. அதேவேளை மிகப்பெரும் கன மழை எதிர்வரும் நாட்களிலும் கிடைக்கவுள்ளன.
ஆகவே இலங்கையின் காலநிலை சார் அனர்த்தமொன்றுடன் தொடர்புடைய அனைத்து திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மிகப் பெரும் மழை, அதிவேக காற்று வீசுகை, வெள்ளப்பெருக்கு தொடர்பில் உடனடி முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வட,கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் மக்கள் அனைவரும் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை முழுமையாக தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் குளங்களின் வான் பாயும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாட்டின் அனைத்து மீனவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம்.
வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை உரமிடல் மற்றும் கிருமிநாசினிகளைத் தெளித்தல் போன்ற எந்த விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம்.
வானிலை தொடர்பான முன்னறிவிப்புக்கள் எப்போதும் மாதிரிகளை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். அது எப்போதும் 100 வீதமும் அது போன்றே நடக்கும் என கூற முடியாது. சில விலகல்கள் இருக்கலாம்.
அனர்த்த தயார்ப்படுத்தல் நிகழ்ந்து அனர்த்தம் நிகழாமல் போனால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடிய வாய்ப்பிருந்தும் அதற்கு தயாராகாமல் இருந்து, அனர்த்தம் நிகழ்ந்தால் ஏற்படும் பாதிப்புக்கள் மீளமைக்க முடியாத பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.


















