-நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியல்ல சாடல்-
அரசாங்கம் காட்டுச் செடிகளை அகற்றிவிட்டு, பூச்செடிகளை நாட்டுகிறோம் எனக் கூறினாலும் சில பிரதியமைச்சர்கள் சேற்றில் மலரும் பூச்சிகளை உண்ணும் பூக்களைப்போல் பெண்களை அவமதித்து நடந்துகொள்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய சந்திராணி கிரியெல்ல எம்.பி. மேலும் பேசுகையில், ஆண், பெண் சமத்துவத்தை இல்லாதொழிப்பதற்காக 16 நாட்கள் வேலைத்திட்டமொன்று உலகளாவிய ரீதியில் நவம்பர் 25ஆம் திகதி முதல், டிசம்பர் 10ஆம் திகதி வரையில் நடத்தப்படுகின்றது. இதன் அங்கமாக இந்த பாராளுமன்றத்திலும், வெளியிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பெண்களுக்கு இது முக்கியமானது.
எமது நாட்டில் ஐந்தில் ஒரு பெண் ஏதேனும் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றார். அது உடல் ரீதியிலானதோ அல்லது சொற்களாலான துன்புறுத்தலாகவும் இருக்கலாம். இதேவேளை பாராளுமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் இதுபோன்ற பெண்கள் துன்புறுத்தல்கள் தொடர்பிலும் எங்களால் அறிய முடிகின்றது.
குறிப்பாகப் பெண்கள் வீட்டில் இருந்து வேலைக்குச் செல்லும் போது, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். உதாரணத்திற்கு பாராளுமன்றத்திலும் கடந்த வாரத்தில் சம்பமொன்று நடந்தது. பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு இதுபோன்ற விடயத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது.
அதாவது காட்டுச் செடிகளை அகற்றி பூச்செடிகளை நடுவதாக இந்த அரசாங்கம் கூறினாலும் அரசாங்கத்தின் சில பிரதி அமைச்சர்கள் சேற்றில் முளைத்த பெண்களைத் தின்னும், பூச்சிகளை உண்ணும் பூக்களைப் போன்றவர்களாகவே இருக்கின்றனர்.
இதனால் அவர்கள் பூச்செடிகளாக அல்லாமல் பூக்களை சுற்றும் வண்டுகளை போன்றவர்களே. குறித்த பெண் ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட அசௌகரியத்தின் போது நான் அவ்விடத்தில் இருந்தேன். இது தொடர்பில் நான் கவலையடைகின்றேன் என்றார்.


















