வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மழை மற்றும் புயல் எச்சரிக்கைக்கும் மத்தியில் தாயக மண்ணி னதும் மக்களதும் விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு, இன்று உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இன்றைய மாவீரர் நாள் நிகழ்வுக்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் எழுச்சிப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு துயிலுமில்லங்கள் சிவப்புஇ மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன.
இன்று மாலை 6.05 மணியளவில், ஆலய மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட அகவணக்கத்தை அடுத்து 6.07 மணியளவில் பொதுச்சுடர் மாவீரர்களின் பெற்றோர்களால் ஏற்றப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த ஏனையவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தவுள்ளனர். தமிழ் மக்களுக்கான உரிமைப்போரின்போது தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் முகமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் நினைவேந்தல் தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இம்முறையும் மாவீரர் நினைவு வாரம் தமிழர் தாயகமெங்கும் வடக்கு, கிழக்கில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மாதிரி மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் தின நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்க தமிழினம் தயாராகியுள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு – கிழக்கில் பாதுகாப்பு தரப்பினரின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு அசௌகரியங்கள், தடைகளுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. கடந்த வருடத்தைபோல், இம்முறையும், மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த அரசாங்கப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் விடுதலைப்புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும்,
போரின்போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதை தடுக்கப்போவதிலை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கு – கிழக்கில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
இதில் மாவீரர்களின் உருவப்படங்களும் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நினைவேந்தல்களில் ஈடுபட்டனர். இவ்வாறான நிலையிலேயே இன்றைய இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுக்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு தமிழர் தாயகம் உணர்வெழுச்சியுடன் காணப்படுகின்றது.
அந்தவகையில், அம்பாறை – கஞ்சிகுடிச்சாறு உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம், மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை மாவீரர் துயிலுமில்லம், தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம், கண்டலடி மாவீரர் துயிலுமில்லம், மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம், திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்,பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம், உப்பாறு மாவீரர் துயிலுமில்லம், மணலாறு மாவட்டத்தில் கோ டாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம், வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் அருகாமை, மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம், பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம், முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம், முல்லைத்தீவு மாவட் டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம், அளம்பில் மாவீரர் துயிலுமில்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம், கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் என்பவற்றில் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.















