வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் பிரதான காரணம் எனக் கூறியுள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், இதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதுமானளவில் குரல் கொடுப்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட எம்.பியான துரைராஜா ரவிகரனால் இந்திய இழுவைப் படகுகளின் வருகை மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகள் தொடர்பில் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குற்றம்சாட்டினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடக்கு மீனவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதற்கு இழுவை மடிப்படகு பிரதான விடயமாக உள்ளது. இந்திய தமிழ்நாட்டு மீனவர்களின் ஆக்கிரமிப்பு இதற்கு காரணமாகும். ஆனால் இது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போதுமான அளவுக்கு குரல்கொடுப்பதில்லை. அங்கு சட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுகின்றது. அந்த முறைகளுக்கு காரணமானவர்கள் யார் என்பதனை நீங்கள் நன்கு அறிவீர்கள். இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி முறைகளால் எமது வட கடலே இல்லாமல் போகும் நிலைமை உள்ளது.
அந்த அழிவான வேலைகளை செய்பவர்கள் யார் என்பது நன்றாக தெரியும். அவர்களின் பெயர்களை நான் குறிப்பிடுவது உங்களுக்கு நல்லதல்ல என்று நினைக்கின்றேன். அவைகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு உதவி செய்யுங்கள் என்றார்.


















