கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள பகுதிகளுக்கு கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் 10.00 மணி முதல் நாளை புதன்கிழமை (23) பிற்பகல் 10.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் மற்றும் கடற்சார் ஊழியர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்,
கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். இக் கடல் பிராந்தியத்திற்கு அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
கற்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளும் காங்கேசன்துறையிலிருந்து முல்லைத் தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது அவ்வவ்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 முதல் 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல்நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் விழிப்புடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


















