சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு சோஷலிசம் இளைஞர் சங்கத்தினர் யாழ். தேவி புகையிரதத்தின் ஊடாக நாளைய தினம் புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்துக்குப் பயணிக்கவுள்ளனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து யாழ். தேவி புகையிரதத்தின் ஊடாக நாளை காலை 6.40 மணிக்கு இந்த பயணம் ஆரம்பமாகி, மாலை 2 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயணத்தின்போது குருநாகல் புகையிரத நிலையத்தில் வைத்து நூல்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
அதேபோன்று அநுராதபுர புகையிரத நிலையத்திலும் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புகையிரதம் யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததும், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்துக்கு நூல்களை வழங்கும் நிகழ்வு நடைபெறும்.
அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும். அங்கு கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சங்கம் மறுநாள் வியாழக்கிழமை (24) எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

















