2022 ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் ரீதியாக பான் இந்திய அளவில் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தை தொடர்ந்து , ‘காந்தாரா : சாப்டர் 1’ எனும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும்’ காந்தாரா – சாப்டர் 1 ‘ திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ராகேஷ் பூஜாரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.
கர்நாடக கடற்கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாரம்பரியமாக வழிபட்ட சிறு தெய்வத்தை மையப்படுத்தி எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து விட்டது என்று படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
அந்த காணொளியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 250 நாட்கள் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் , தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காந்தாரா படத்தின் வெற்றியைப் போல் இப்படமும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















