தமிழ் சினிமாவில் ‘காந்த குரலோன் ‘ என அடையாளப்படுத்தப்பட்டு போற்றப்படும் நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஒன்ஸ் மோர் ‘ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மீண்டுமா ‘ எனும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஒன்ஸ் மோர் ‘ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ்- அதிதி சங்கர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி முப்பத்தியிரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்த நிலையில்… இப்படத்தில் இடம்பெற்ற ‘ மீண்டுமா..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
காதலின் பிரிவை உணரும் காதலர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் சோக பாடலாக உருவாகி இருக்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத பின்னணி பாடகி ஆவணி மல்கார் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் சரணத்தில் இடம்பெறும் ‘இமை கொதித்தது போதும்… எனை பிரிந்தது போதும் ‘ எனும் வரிகள்.. காதலின் பிரிவை சுமக்கும் பெண்ணின் வலியை பிரதிபலிப்பதால்… காதலர்களிடையே பெரும் வரவேற்பை இப்பாடல் பெற்றிருக்கிறது.


















