பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராகவிருப்பதாக இந்தியத் துணைத்தூதர் சாய்முரளி வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்தார்.
யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளிக்கும் வடக்கு மாகாணத்தின் ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்றது.
இதன் போது, வட மாகாண மக்களுக்கான தற்போதைய உடனடித் தேவைகளின் பட்டியலை வழங்கினால், உதவிகளை விரைந்து வழங்க முடியுமெனவும் அழிவடைந்த உட்கட்டுமானங்களின் சேத விவரங்களையும் வழங்குமாறும் இந்திய துணைத்தூதர் தெரிவித்தார்.
மேலும், பேரிடரின்போது இந்தியாவால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் குறிப்பிட்ட அவர், உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இத்தகைய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் தெரிவித்தார்.
இதற்கு பேரிடர்களின் போது எப்போதும் முதலாவதாக கைகொடுப்பது இந்தியா தான் என்று குறிப்பிட்ட ஆளுநர், அதற்காக மாகாண மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் கூடுதலான அழிவுகளையும், அதிக உட்கட்டுமான அழிவுகளையும் எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், இறங்குதுறைகள், போக்குவரத்து வீதிகள், பாலங்கள், சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் என பல்வேறு உட்கட்டுமானங்கள் அழிவடைந்துள்ள விவரங்களை முன்வைத்தார்.
இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
















