-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மக்களிடம் கோரிக்கை-
-பா.பிரதீபன்-
வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில ஊழல், பாரபட்சமென பரவும் வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
ஜனநாயகக் கட்டமைப்பில் அரச செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதையும், விழிப்புடன் இருப்பதையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்கள் மத்தியில், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது சமூகப் பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும்.
உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடினேன். அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமையவே பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராம மட்ட ஏனைய அலுவலர்கள் ஊடாகத் தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித இரகசியத் தன்மையும் இல்லை. உதவித்தொகை பெறத் தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் அந்தந்தப் பகுதிகளில் பகிரங்கமாகத் காட்சிப்படுத்தப்படும். இதனை மாவட்டச் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, தகுதியான எவரும் விடுபடவோ, தகுதியற்ற எவரும் உள்நுழைவதற்கோ இதில் வாய்ப்புகள் இல்லை.
இதுவரை மிக முக்கியமான உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை. அவ்வாறு பணம் வைப்பிலிடப்படும் முன்னரே, ‘முறைகேடுகள் நடந்துவிட்டதாக’ அரைகுறைத் தகவல்களைக் கொண்டு பரப்பப்படும் செய்திகள் அடிப்படையற்றவை. தெரிவுப் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னரே கொடுப்பனவுகள் இடம்பெறும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சமடையத் தேவையில்லை.
அரசாங்கத்தின் பிரதான இலக்கு ஊழலை ஒழிப்பதேயாகும். எனவே, மக்களின் கண்ணீரில் இலாபம் தேடும் ஈனச் செயலுக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இனி இடமில்லை.
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கடந்து, முறைகேடுகள் தொடர்பில் யாரிடமேனும் தகுந்த ஆதாரங்கள் இருப்பின், அதனை எனது கவனத்துக்கு நேரடியாகக் கொண்டு வரலாம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
















