-க.கனகராசா-
வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டு செல்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
சூழலைமாசுபடுத்துபவர்கள் தேச விரோதிகள். இவர்களின் செயல் தேசத்தை அழிவுக்கு உட்படுத்தும். இயற்கையை இரசிக்க வேண்டிய சிறுவர்கள் இளம்பருவத்தினர் கண்களையும், மூக்கினையும் மூடிக்கொண்டு பயணம் செய்யும் சூழல்கள் அதிகரித்துள்ளன.
எங்கும் கழிவு, எதிலும் கழிவு என்றும் கழிவு என்ற நிலையே காணப்படுகிறது. இன்றையவர்களின் மனிதநேயம் எங்கே என கேட்க வேண்டிய நிலை வந்துள்ளது. தனது வீட்டுக் கழிவினை வீதியிலே வீசிவிடும் மிலேச்சத்தனமான சிந்தனை அருவருக்கதக்கது.
உலகத்திற்கே நாகரீகத்தையும், ஒழுக்கத்தையும் , சுத்தத்தையும் கற்றுக்கொடுத்த தமிழினம் இன்று தன்னை வழிப்படுத்த தெரியாது தள்ளாடுகிறது.
கழிவுமுகாமைத்துவ பொறிமுறை சரியாக இல்லை. தான் வாழ்ந்தால் மட்டும் போதும் என்ற குறுகிய சிந்தனை. தொற்று நோய் ஏற்பட்டால் அந்த தொற்று நோய் தனக்கும் குடும்பத்திற்கும் ஏற்படும் என்ற சிந்தனை அற்றவர்கள். எனவே சூழலை மாசுபடுத்துபவர்கள் கொலையைவிட மோசமான செயலை செய்கிறார்கள். இங்கும் பாதிக்கப்படுவது கிராமப்புறத்தவரே.
வெள்ளத்தில் மிதந்த பிளாஸ்ரிக், பொலித்தீன், பம்பஸ் கழிவுகள் இயற்கையை சேதமாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சூழலை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழும் சூழலை உள்ளூராட்சி சபைகள் ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் எம்மை அழிக்க எதிரி தேவை இல்லை எமது இனத்தின் சூழல்மாசாக்கிகளே போதும் என்றார்.
















