-அமரர் இராசதுரையின் அனுதாபச் செய்தியில் டக்ளஸ் தெரிவிப்பு-
-கஜிந்தன்-
கிழக்கு எமக்கு அளித்த மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான செல்லையா இராசதுரையின் வாழ்வு நிறைவுற்றிருக்கிறது.
சொல்லின் செல்வர் என்று விதந்துரைக்கப்படும் அன்னாரின் இழப்பு அவரை நேசித்த மக்களுக்கு நிச்சயம். பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அமரரின் இழப்புக் குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு மக்களின் உணர்வுகளை நெஞ்சில் சுமந்து, அரசியலில் ஈடுபட்ட அமரர் இராசதுரை வெறுமனே உணர்ச்சி அரசிலுக்குள் மக்களை இழுத்துச் சென்று அவதிக்குள்ளாக்காமல், தான் சார்ந்த மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்புக்களையும் வென்றெடுப்பதற்கு யதார்த்த வழிமுறைகளையும் கையாண்டு இருந்தார்.
அன்றைய இளைஞர்களாகிய எமக்கு அன்னாரின் அன்றைய தீர்மானங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எனினும், கால ஓட்டம் அவரின் தீர்மானங்களிலும் ஒரு வகை நியாயம் இருப்பதை புரிய வைத்திருந்தது.
இந்நிலையிலே வயது மூப்புக் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அன்னாரின் வாழ்வு நிறைவுற்றிருக்கின்றது.
அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அவரை நேசித்த மக்களுக்கு ஆறுதலையும், அன்னாருக்கு ஆழ்மன அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அந்த அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















