ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023-2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வடமாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற 274 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, தலா 100, 000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம் 27.4 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.
நாட்டில் மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்ச்சி இதுவாகும். இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்தது.



















