-அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்-
போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.இதில் அவர் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
வங்குரோத்து நிலையில் இருந்த நாடே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிப்புகள் இருந்தன. எனவே, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடந்த ஒரு வருடமாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நாட்டில் அரசியல் கலாசாரம் மாற்றப்பட்டு வருகின்றது. சிறந்தொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். புதிய அரசியல் கலாசாரம் என்றால் என்னவென்பதை நாம் செயலில் காட்டியுள்ளோம்.
பிரதமருக்கு மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு 33 லட்சம் ரூபா, ஆனால் எமது பிரதமர் 4 லட்சம் ரூபாதான் பயன்படுத்துகின்றார். ஏனையவற்றை திறைசேரிக்கு அனுப்பி விடுகின்றார்.
கடந்த காலங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடின. இவற்றை ஒழிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர் சமுதாயகத்தை நாம் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருள் வியாபாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் கறுப்பு அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது அரசாங்கத்துக்கு இருக்கும் மிக முக்கிய பொறுப்புகளில் இதுவும் ஒன்றாகும். நிச்சயம் போதைப்பொருளை ஒழிப்போம் என்றார்.


















