ஹங்வெல்ல – கஹஹேன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள காணியில் விகாரை கட்டுவதற்கு முயன்ற பௌத்த பிக்கு உள்ளிட்ட குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஹங்வெல்ல கஹஹேன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள காணி ஒன்றில் மற்றுமொரு விகாரையை அமைப்பதற்காக அக்காணியை பார்வையிட தேரர் உட்பட குழு ஒன்று சென்றது. இதன்போது அங்கிருந்த பிரதேசவாசிகள் சிலருக்கும் அந்த குழுவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. தகராறில் ஈடுபட்ட அனைவரும் சமாதானமாக அங்கிருந்து புறப்பட்ட பின்னர் சிறிது நேரத்தில் அந்தக் குழு ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரை அக்காணிக்கு அழைத்துச்சென்றது. இதன்போது அந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி அங்கிருந்த இளைஞன் ஒருவனை துப்பாக்கி முனையில் மிரட்டினார்.
பாதிக்கப்பட்ட இளைஞன் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்துக்கு சென்றார். இதன்போது ஹங்வெல்ல பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் குறித்த இளைஞனை தாக்கினார்.
இதனால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு நியாயம் கோரி பிரதேசவாசிகள் சிலர் ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஒன்றுகூடியமை குறிப்பிடத்தக்கது.


















