இலங்கையின் பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் சர்வதேச ஒத்துழைப்பை பெறுவது அவசியம் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்தியாவில் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கலாசார மரபுகள் மற்றும் அறிவியல் தரநிலைகள் ஆகிய இரண்டையும் மதித்து இந்த மருத்துவ முறைகளை நிலையான முறையில் அபிவிருத்தி செய்யவும்,
நவீன சுகாதார சேவைகளுடன் ஒருங்கிணைக்கவும் உலக சுகாதார ஸ்தாபனம் வகுத்துள்ள வழிகாட்டல் வரைபடத்தை இலங்கை முழுமையாகப் பின்பற்றும்.
இலங்கை சுகாதார அமைச்சினால் நாடு முழுவதும் நிறுவப்பட்டு வரும் ஆரோக்யா என்னும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கத்திய மற்றும் பாரம்பரிய மருத்துவ முறையையும் ஒருங்கிணைத்து சிகிச்சை சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களில் கணிசமானோர் பாரம்பரிய மருத்துவத்தை நாடுவதால், இதனைத் தேசிய சுகாதாரக் கொள்கையில் மேலும் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
இலங்கையின் பாரம்பரிய மருத்துவ வரலாறு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பல தலைமுறைகளாகப் பேணப்பட்டு வரும் மருத்துவக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இது வளர்ச்சியடைந்துள்ளது. வெத பரம்பரை (சிங்கள சொற்பதம் – மருத்துவப் பரம்பரை) என அழைக்கப்படும் இலங்கைக்குக்கே உரிய தனித்துவமான மரபுகள் மற்றும் பரம்பரைகளை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியங்களின் மூலம் ஒரு பூர்வீகத் தோற்றதுடன் பேணப்பட்டு வருகிறது.
1961ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க ஆயுர்வேதச் சட்டத்தின் கீழ் ஆயுர்வேத, சித்த, யுனானி மற்றும் சுதேச சிகிச்சை முறைகளைக் கொண்ட பாரம்பரிய மருத்துவம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
ஆயுர்வேத தினைக்களம் இலங்கையின் பாரம்பரிய மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்தும் பிரதான கேந்திர நிலையமாக செயற்படுகின்றது.
அதற்கமைய தற்போது நாட்டில் 2,363 பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத, சித்த, யுனானி மருத்துவ அதிகாரிகளும், 22,000 பாரம்பரிய மருத்துவப் பயிற்சியாளர்களும் உள்ளனர்.
மேற்கத்திய மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பதற்கான முறையான வேலைத்திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உத்திகளைப் பின்பற்றும் நாடாக உள்ளது. அந்தவகையில், பாரம்பரிய மருத்துவத்தைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்றார்.


















