தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி, கஹதுடுவ, பஹலகம என்ற இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் கைவிடப்பட்ட வீட்டில் மறைந்திருந்த போது, இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதன்போது, சந்தேக நபருக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18 ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த துப்பாக்கிதாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பஹலகம, கண்டலோவிட்டவில் உள்ள கைவிடப்பட்ட தற்காலிக வீடொன்றை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது வீட்டிற்குள் மறைந்திருந்த சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது, விசேட அதிரடிப்படையினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூட்டை நடத்தியதில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் விசேட அதிரடிப் படையினரின் அதிகாரி ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெதர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


















