-முன்னாள் எம்.பி சஞ்சீவ எதிரிமான்ன-
இலங்கையின் 77ஆவது சுதந்திர ஆண்டு, 76ஆவது ஆண்டை விட எவ்விதத்தில் சிறப்பானது என்ற கேள்வி எழுவதாகவும், இந்த அரசாங்கத்தின் 77ஆவது ஆண்டு நிறைவடையும் போது நாட்டின் எந்தவொரு துறையிலும் தீர்க்கமான நேர்மறையான தலையீடுகளையோ அல்லது புதிய ஆரம்பங்களையோ ஏற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக முன்னாள் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
பத்தரமுல்லவில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுதந்திர இலங்கையின் 76 ஆண்டுகள் குறித்து ஜே.வி.பி மற்றும் என்.பி.பி உள்ளிட்ட திசைகாட்டி தரப்பினர் கடுமையான மற்றும் கொடூரமான விமர்சனங்களை முன்வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திர இலங்கையின் 77ஆவது ஆண்டு திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் கழிந்துள்ள நிலையில், முந்தைய 76 ஆண்டுகளை விட இந்த 77ஆவது ஆண்டு எவ்விதத்தில் விசேடமானது என்பதை அரசாங்கம் தனது மனசாட்சியிடம் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நாட்டின் எந்தவொரு துறையிலும் தீர்மானமிக்க சாதகமான தலையீடுகளை செய்ய இந்த அரசாங்கம் தவறியுள்ளதுடன், அவர்களால் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்ட பல துறைகளிலும் புதிய பிரச்சினைகளையே உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
குறிப்பாக, 6ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் சிறுவர்களின் மனதிற்குப் பொருத்தமற்ற மற்றும் பெரியவர்கள் கூட பார்க்கக்கூடாத இணையதளம் ஒன்றிற்கான அணுகல் வழங்கப்பட்டமை போன்ற விசித்திரமான பிரச்சினையுடனேயே இந்த ஆண்டு நிறைவடைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த அரசாங்கம் தம்மால் அல்லது தமக்கு கீழ் இழைக்கப்படும் தவறுகள் குறித்து நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகளை முன்னெடுத்த வரலாற்றை கடந்த ஆண்டில் காணவில்லை என அவர் தெரிவித்தார்.
இதற்கு உதாரணமாக, அமைச்சர் வடுகல தான் பதவியேற்ற நாளில் 17 கடவுச்சீட்டுகள் யாரோ ஒருவரால் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், அவற்றைச் செய்தது யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்தத் தவறிவிட்டார் என எதிரிமான்ன குறிப்பிட்டார்.
எனவே, தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத விசாரணைகளுக்கு அப்பாற்பட்டு, நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனத் தான் முன்மொழிவதாக அவர் தெரிவித்தார்.
யக்கல பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டும் விசாரணைகள் நடத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், குறைந்தபட்சம் இந்தப் பாடப்புத்தக விவகாரம் தொடர்பிலாவது ஏற்றுக்கொள்ளக்கூடிய சுதந்திரமான விசாரணையை எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவித்தார்.


















