2026 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மக்கள் மத வழிபாடுகளுடன் புத்தாண்டை வரவேற்றனர்.
யாழ்ப்பாணம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் விதத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டன.
2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது.
வவுனியா
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புது வருட விசேட ஆராதனை நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
நள்ளிரவு 12 மணிக்கு ஆலயத்தின் பங்குத்தந்தை கிறிஸ்தோபர் அந்தோனிதாஸ் டலீமா தலைமையில் இடம்பெற்ற விசேட ஆராதனையில், திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, விசேட வழிபாடுகளும் இடம்பெற்றது.
இதன்போது, நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான தேவாலயமான புனித திரேசாள் பேராலயத்தில் 2026ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு ஆராதனைகள் இரவு 11.30 மணிக்கு கிளிநொச்சி பங்குத் தந்தையின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றன.
இதன்போது, இயற்கை அனர்த்தங்களிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.
மன்னார்

மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு தூய ஆவியானவரின் ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்ட நிலையில் இரவு 11.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்ட பெயர் பலகையை மன்னார் மறைமாவட்ட ஆயர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

அதனை தொடர்ந்து நேற்று இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.
இதன்போது, ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கினர்.
மட்டக்களப்பு
புதுவருடப்பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று நள்ளிரவு நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான மக்கள் வருகைதந்ததை காணமுடிந்தது.
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை நிலவுகின்றபோதிலும் இனமதவேறுபாடுகள் இன்றி பெருமளவானோர் மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.
மட்டக்களப்பு புளியந்தீவு

புதுவருடப்பிறப்பினையொட்டி கிழக்கு மாகாணத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.
ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெமில்டன் தலைமையிலான அருட்தந்தையர்களினால் புதுவருடத்தினையொட்டி விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது, நாட்டில் நீடித்த சமாதானமும் சாந்தியும் வேண்டி விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாக்க விசேட பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
புதுவருட பிறப்பினையொட்டி இதன்போது விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அனைவருக்கும் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.
புதுவருட சிறப்பு வழிபாட்டில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


















